தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

கூடலூரில் தனியார் தேயிலை எஸ்டேட்டில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் போனஸ் வழங்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக எஸ்டேட் நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கத்தினர் நிலுவை சம்பளம் மற்றும் போனஸ் வழங்க கோரிக்கை விடப்பட்டது.

இந்தநிலையில் நிலுவை சம்பளம் மற்றும் 3 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள போனஸ் உள்ளிட்ட பண பலன்கள் உடனடியாக வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் நேற்று காலை 9 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்டேட் முகாம் அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் குணசேகரன், முகம்மது கனி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தாசில்தார் சித்தராஜ் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகள் கலந்துகொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் நாளை (அதாவது இன்று) பண பலன்கள் வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் உடன்பாடு ஏற்பட்டது. இதை ஏற்று மாலை 4 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்