தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கூடலூர் அருகே சம்பளம் வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-30 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் அருகே சம்பளம் வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கூடலூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் அருகே கீழ்நாடுகாணியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். தொடர்ந்து தோட்ட அலுவலகம் முன்பு சம்பளம் வழங்காததை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் சம்பளம் வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், தேவாலா போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. இதனிடையே சம்பளம் வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளம் உடனடியாக கிடைத்தால் மட்டுமே அன்றாட செலவுகளை மேற்கொள்ள முடியும். கடந்த மாத சம்பளம் வழங்காமல் உள்ளதால், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் சம்பளம் வழங்காமல் காலந்தாழ்த்தினால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்