கூடலூர் வனக்கோட்டத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் கூடலூர் வனக்கோட்டத்தில் 35 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2022-09-24 18:45 GMT

கூடலூர்

பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் கூடலூர் வனக்கோட்டத்தில் 35 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

பசுமை இயக்கத்திட்டம்

தமிழக முழுவதும் வனத்தின் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்து நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநில முழுவதும் வனத்துறை சார்பில் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் பணி நடைபெற்றது.

கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, தேவாலா, நாடுகாணி, சேரம்பாடி, பிதர்காடு உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிப்பாடி நரிமூலா பகுதியில் வனத்துறை சார்பில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

35 ஆயிரம் மரக்கன்றுகள்

நிகழ்ச்சியில் தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், நகராட்சி தலைவர் பரிமளா, ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன், வனச்சரகர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன், வனவர் செல்லதுரை உள்பட அனைத்து துறையினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-பசுமையை அதிகரிக்கும் நோக்கத்தில் கூடலூர் கோட்ட வனத்துறை சார்பாக சில்வர் ரோக், அகில், நாவல் என 35 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய தோட்டங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் புதியதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீமதுரை, மசினகுடி ஊராட்சிகள்

இதேபோல் ஸ்ரீ மதுரை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுனில், துணை தலைவர் ரெஜி மேத்யூ உள்பட கவுன்சிலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. மசினகுடி ஊராட்சியில் தலைவர் மாதேவி மோகன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபா நகர் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பசுமை நகராக ஊராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபாலன், ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு சோலை மர நாற்றுக்கள் மற்றும் பழ நாற்றுக்களை நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாற்றுக்கள் நடப்பட்டன.

இதே போல கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில் கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள ஜான் சல்லிவன் நினைவக வளாகத்தில் பசுமை இயக்கத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, கோத்தகிரி பேரூராட்சி துணைத் தலைவர் உமாநாத் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இதில் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமா நாத், செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்