திட்டம திப்பீடுகளை மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து தயாரிக்க வேண்டும்

திட்ட மதிப்பீடுகளை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அதிகாரிகள் தயார் செய்ய வேண்டும் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கதிர்ஆனந்த் எம்.பி.பேசினார்.

Update: 2023-05-16 18:09 GMT

கண்காணிப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் அதன் தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி தலைமையில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன், குழு இணை தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், கோ.செந்தில்குமார், அமுலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் தலைவர் கதிர்ஆனந்த் எம்பி பேசியதாவது:-

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கும் அல்லது மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாகும்.

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உணவினை பள்ளி குழந்தைகளுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார்செய்து வழங்கப்படுவதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலைகளை பண்ணை குட்டை அமைத்தல், மண் வரப்பு அமைத்தல், மரக்கன்றுகளுக்கு நீர்தேக்க குழி அமைத்தல் போன்ற விவசாய பணிகளுக்கு அதிகபடியான பயன்படுத்திட வேண்டும்.

புதிதாக பொறுப்பு ஏற்ற தொழில்துறை அமைச்சரிடம் சிப்காட் கொண்டு வர வேண்டும் என்று கோர்க்கை வைத்தோம். அதற்கு அமைச்சரும் கண்டிப்பாக சிப்காட் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதிய திட்டமதிப்பீடு தயார் செய்யும் பொழுது மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தயார் செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் பலர் மனகணக்கில் திட்டமதிப்பீடு தயார் செய்கின்றனர். இதனால் திடங்களை நிறைவேற்ற முடியவில்லை.

ஒரு பணியை முடிக்க எவ்வளவு பணம் செலவாகும், பணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கணக்கிட வேண்டும். இதற்கு உதாரணமாக வாணிபாடியில் பல பணிகளை கூறலாம். இதனால் மனகணக்கை விட்டு சரியாக திட்டமதிப்பீடு செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணிகளை விவசாயத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, நகர மன்ற தலைவர்கள் சங்கீதா, காவியா, ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி, சத்யா, வெண்மதி, சுரேஷ்குமார், சங்கீதா மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்