இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான திட்டமிடுதல் குழு கூட்டம்
கொள்ளிடம் ஒன்றியத்தில் 6 வயது முதல் 18 வயதுடைய இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான திட்டமிடுதல் குழுக்கூட்டம் நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஒன்றியத்தில் 6 வயது முதல் 18 வயதுடைய இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான திட்டமிடுதல் குழுக்கூட்டம் நடந்தது.
குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 100 சதவீதம் பள்ளியில் சேர்க்க திட்டமிடுவதற்கான குழு கூட்டம் நேற்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி வரவேற்றார்.வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி,கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் புறத்தொடர்பு பணியாளர் மங்களதாசன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் விஜயா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், ஒருங்கிணைப்பாளர் ஐசக் ஞானராஜ், சிறப்பு ஆசிரியர்கள் ராஜலட்சுமி,பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத ஒன்றியமாக கொள்ளிடம் ஒன்றியத்தை மாற்றுவதற்கு குழு உறுப்பினர்களுக்கு முழுமையான பங்கு உண்டு.
136 மாணவர்கள்
நமது ஒன்றியத்தில் சுமார் 196 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதில் 136 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம் .மீதமுள்ள மாணவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் புலம் பெயர்ந்து உள்ளார்கள். இவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.நமது ஒன்றியத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்றுள்ள பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
செங்கல் சூளைகள், கடைகள்,வியாபார நிறுவனங்கள் போன்றவற்றில் பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள் இருந்தால், உடனடியாக 9788858785,9965098829 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.