பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டம்-மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-03 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் ஆய்வு செய்தார்.

மினி ஸ்டேடியம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் உதயநிதி ஸ்டாலினும் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து நேற்று கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளிடம் ஸ்டேடியம் அமைக்க தேவையான இடவசதி உள்ளிட்ட தகவல்களை அவர் கேட்டறிந்தார். இதையடுத்து பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்திற்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் வைரமுத்து மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வருவாய் அலுவலர் ஆய்வு

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சரும் அறிவித்து உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அங்கு தற்போது உள்ள மைதானத்தின் பரப்பு மற்றும் போதுமான இடவசதி உள்ளதா? என்று மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். மேலும் வேறு ஏதாவது இடங்கள் உள்ளதா; என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது என்றனர்.

இதுபற்றி விளையாட்டு வீரர்கள் கூறுகையில், பொள்ளாச்சியில் விளையாடுவதற்கும், பயிற்சி மேற்கொள்ள போதிய மைதானங்கள் இல்லை. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டு பயன்படுத்தாமல் உள்ளது. சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. மேலும் அந்த பள்ளி மைதானத்தில் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதால் அங்கும் போதிய வசதிகள் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்