திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 குறுங்காடுகள் அமைக்க திட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-05-23 18:37 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

மரக்கன்று நடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வரிக்கம் ஊராட்சியில் இயங்கி வரும் ஆம்பூர் டெக், துத்திப்பெட் மற்றும் மளிகைதோப்பு பிரிவு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 ஏக்கர் பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

500 குறுங்காடுகள்

முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டினை பசுமையாக மாற்ற 10 ஆயிரம் குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையில் இன்றைய தினம் 3 ஏக்கர் பரப்பளவில் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் அமைத்து வருகின்றோம். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற காரணத்தால் பிளாஸ்டிக் ஒழிப்பினை மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமின்றி மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பை வழங்கி வருகின்றோம்.

ஆறுகள், குளங்களில் நீண்ட காலமாக தேக்கி வைக்கப்பட்டிருக்கின்ற குப்பைகளை அகற்றி வருகின்றோம். அதன் மூலமாக புற்றுநோய் பரவல் தவிர்க்கப்படுகிறது. குறுங்காடுகள் அமைப்பதன் மூலமாக வெப்பமயமாகுதல் தடுத்து அந்த இடத்தில் குளிர்ந்த சூழ்நிலை ஏற்படுகின்றது. தற்போது வரை நமது மாவட்டத்தில் இரண்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தது 500 குறுங்காடுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

பின்னர் ஆம்பூர்டெக், துத்திப்பெட் மற்றும் மளிகை தோப்பு பிரிவு சுத்திகரிப்பு பொது நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், துணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) பாத்திமா, ஆம்பூர்டெக், துத்திப்பெட் மற்றும் மளிகை தோப்பு பிரிவு போது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்