நெருங்கும் கிறிஸ்துமஸ்: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வார்கள் என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 500 சிறப்பு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு பண்டிகை விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதாலும் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி வரக்கூடும் என்பதால் கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.