சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-04-06 18:50 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்பு கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன.

இதில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகள் தவிர மீதமுள்ள 11 உறுப்பு கல்லூரிகளில் உள்ள சிவில் பாடப்பிரிவின் தமிழ் மற்றும் ஆங்கில வழிப்பிரிவுகளையும், எந்திரவியல் பாடப்பிரிவின் தமிழ்வழி பிரிவை மூடுவதற்கும், எந்திரவியல் ஆங்கில வழி பிரிவை ரோபோட்டிக்ஸ் பாடப்பிரிவுடன் இணைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மூடப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையான பேராசிரியர்கள் மட்டும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள உறுப்புக்கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 11 கல்லூரிகளிலும் பணியாற்றும் இடைக்கால பேராசிரியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவர் என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது.

மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு இடைக்கால ஆசிரியர்களும், மாணவர்களும் எந்த வகையிலும் காரணம் அல்ல. கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாதது தான் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு காரணம்.

எனவே, 11 உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தை கைவிடும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இடைக்கால பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்