பெருந்துறை அருகே பரிதாபம்வாய்க்காலில் மூழ்கி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

பெருந்துறை அருகே வாய்க்காலில் மூழ்கி என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-04-24 21:25 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே வாய்க்காலில் மூழ்கி என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

என்ஜினீயர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜெய்லானி. இவருைடய மகன் முகமது ரிஸ்வான் (வயது 21). இவர் காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதேபோல் அதே ஊரை சேர்ந்தவர் ஷாஜகான். இவருடைய மகன் முகமது சுபீர் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

குளிக்க சென்றனர்

முகமது ரிஸ்வானும், முகமது சுபீரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கருக்கம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் வாய்க்காலுக்குள் இறங்கி குளித்து உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.

மூழ்கினர்

நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் 2 பேரும் வராததால் அந்த பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள், இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாய்க்காலில் மூழ்கியவர்களை தேடினர். இருட்டும் வரை தேடியும் அவர்கள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை மீண்டும் வாய்க்காலுக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, கருக்கம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் அருகே தண்ணீரில் கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களது உடலை கண்டதும் 2 பேரின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி அறிந்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமது ரிஸ்வான், முகமது சுபீர் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்