வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரிசன்மார்க்க சாதுக்கள் உண்ணாவிரதம்

வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி சன்மார்க்க சாதுக்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.

Update: 2023-07-25 18:45 GMT


வடலூர், 

வடலூரில் ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் சத்திய தர்மச்சாலை மற்றும் சத்திய ஞான சபையை நிறுவி சன்மார்க்க நெறியை பரப்பினார். இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர தினத்தன்று ஜோதிதரிசனமும், ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழாவும் நடைபெற்று வருகிறது,

இந்த நிலையில் வள்ளலார் சன்மார்க்க நெறியை பின்பற்றி வாழ்ந்து வரும் சன்மார்க்க சாதுக்கள், வள்ளலார் கொள்கைநெறிப்படி, வடலூர் நகரத்தையும், வள்ளலார் பிறந்த மருதூர், அவர் வாழ்ந்த கருங்குழி, மறைந்த மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களை மது, மாமிசம் அற்ற புனித நகரமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வடலூர் சத்திய ஞான சபை எதிரே சன்மார்க்க சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்சாது சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சாதுக்கள் ஹரிகிருஷ்ணன், ராஜா, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாதுக்கள் அய்யனார், சதீஷ், பாபு, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்த வடலூர் போலீசார் நேரில் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, உரிய அனுமதி பெற்று போராட்டத்தை நடத்துவதாக கூறி அங்கிருந்து சாதுக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்