அன்னாசி பழம் அறுவடை பணிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் அன்னாசி பழம் விலை உயர்ந்ததை தொடர்ந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-22 19:57 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் அன்னாசி பழம் விலை உயர்ந்ததை தொடர்ந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அன்னாசி சாகுபடி

தமிழகத்தில் அன்னாசி பழங்களின் முக்கிய விளை நிலமாக குமரி மாவட்டம் மாறி வருகிறது. முன்பு இங்கு வேலிப்பயிராகவும், பாறைக்கட்டுகள் மற்றும் குன்றுகளிலும் பயிரிடப்பட்ட அன்னாசி, தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் ரப்பர் மறுநடவு செய்யப்படும் தோட்டங்களிலும், தரிசாக கிடக்கும் நிலங்களிலும் பயிரிடப்படுகிறது.

வாழை, மரவள்ளி போன்ற பயிர்களை விட அன்னாசி நடவும், பராமரிப்பும் எளிதானது. மேலும், இதில் பிற பயிர்களை விட காற்று மற்றும் மழை அபாயம் குறைவு என்பதால் ஊடு பயிராக அன்னாசியை நடவு செய்ய விவசாயிகள் விரும்புகின்றனர்.

விலை உயர்வு

தற்போது குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அன்னாசி பழங்கள் உள்ளூர் மற்றும் தமிழகத்தின் சென்னை கோயம்போடு, ஆந்திராவின் விசாகப்பட்டிணம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

குமரியில் தற்போது வடகிழக்கு பருவ மழை முற்றிலும் தணிந்து வெயில் நிலவி வருகிறது. இதனால், அன்னாசிப் பழங்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது. வரும் மாதங்கள் கோடை காலமாக இருக்கும் என்பதால் அன்னாசிப் பழங்களின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அன்னாசி பழத்தின் விலையும் கணிகமாச உயர்ந்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து குலசேகரத்தில் உள்ள அன்னாசி பழ வியாபாரியான மணலிவிளையை சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், வெயிலின் தாக்கம் மற்றும் கோடை காலம் நெருங்கி வருவதால் அன்னாசிப் பழங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், விலையும் உயர்ந்துள்ளது.

தற்போது விவசாயிகளிடமிருந்து முதல் தர பழங்களை கிலோ ரூ.33-க்கு கொள்முதல் செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வருகிற நாட்களில் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

அன்னாசிப் பழங்களுக்கு தற்போது நியமான விலை கிடைப்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்