கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்- பெண்கள் உள்பட 44 பேர் கைது

கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-22 17:01 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர்களை கண்டிப்பதாகவும் கூறி, நேற்று காலையில் அந்த அலுவலகம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு சென்றனர்.

ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாரிடம் பா.ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறியல்-கைது

அப்போது திடீரென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாக கூறி அந்த கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, நகர தலைவர் சீனிவாசன், மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட தலைவர் கலையரசி, துணைத்தலைவர்கள் அமுதா, தில்லைமுத்து உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

மேலும் 10 பேர்

இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் பா.ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 10 பேர் அந்த அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

இவர்களையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்