பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க கட்டாயம் இல்லை - பல்கலை. மானியக் குழு

பிஎச்டி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

Update: 2022-09-28 08:29 GMT

சென்னை,

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.

ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75% மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்ற தகவலை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி-களில் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ஐஐடியில் முனைவர் பட்டம் பயிலும் சில மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரிப்பதும் யுஜிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக, பின்நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்தது.

அதன்படி, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று நாடு முழுவதும் விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்