பி.எப்.ஐ. மீதான தடை எதிரொலி - தமிழகத்தில் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
பி.எப்.ஐ. அமைப்பின் மீதான தடை எதிரொலியாக தமிழகத்தில் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. மற்றும் இந்து முன்னனியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ராமேஸ்வரம் கோவில் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ரஷீத் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.