பெருந்துறை அருகே துடுப்பதி பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பெண்கள்

பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-19 20:54 GMT

பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து பெண்கள் மனு கொடுத்தனர்.

டாஸ்மாக் கடை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி, பல்லபாளையம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் ஊரைச்சேர்ந்த மாணவ -மாணவிகள் தினந்தோறும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து துடுப்பதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் துடுப்பதி துலுக்கபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

அகற்ற வேண்டும்

இங்கு அடையாளம் தெரியாத நபர்கள் மதுகுடித்துவிட்டு, மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியும், கையைப்பிடித்தும், சைக்கிளை பிடித்து இழுப்பதாகவும் எங்கள் ஊரைச்சேர்ந்த சிறுவர், சிறுமிகள் கூறி வருகின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது.

மேலும் இதன் காரணமாக எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே பயமாக உள்ளது. பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் குடிமகன்களாலும், அடையாளம் தெரியாத நபர்களாலும் எதிர்பாராதவிதமாக அவ்வப்போது குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே துடுப்பதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்