அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்ல ஓடையை தூர்வார வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்ல ஓடையை தூர்வார வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-10-23 16:57 GMT

சென்னிமலை

அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்ல ஓடையை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்கால்

சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள முதலைமடை வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீரை மாற்று வழியில் வெளியேற்றுவதற்காக முதலைமடை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியான திருப்பூர் மாவட்டம் மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்து அங்கு தண்ணீர் தேவைப்படாத போது இந்த சட்டர்களை திறந்து ஓடை வழியாக தண்ணீரை திறந்து விடப்படுவது வழக்கம். அந்த ஓடையில் செல்லும் தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலக்கும்.

ஓடையில் தண்ணீர் திறப்பு

சமீபத்தில் கடைமடை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் முதலைமடை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது.

ஆனால் ஓடையில் அனைத்து இடங்களிலும் புதர் மண்டி கிடப்பதால் தண்ணீர் தேங்கி ஓடையின் குறுக்கே 5 இடங்களில் உள்ள தரைப்பாலங்களையும் மூழ்கடித்து செல்கிறது. இதனால் தரை பாலத்தை தாண்டி செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து சென்னிமலை அருகே உள்ள சொக்கநாதபாளையத்தை சேர்ந்த கொசவங்காடு துரைசாமி என்ற விவசாயி கூறும்போது, 'கடந்த வாரமும் கடைமடை பகுதியில் பலத்த மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தை கடக்க முடியவில்லை.

அதேபோல் ஓடையின் இருபுறமும் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து விட்டது. இருசக்கர வாகனங்களில் சென்ற பல பேரின் வாகனங்கள் தண்ணீர் புகுந்து பழுதாகிவிட்டது. தரைப்பாலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதர் மண்டி கிடப்பதால் தண்ணீர் தேங்கி தரைப்பாலத்தை மூழ்கடிக்கிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதனால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக தரை பாலத்தின் மேல் தண்ணீர் செல்லாமல் இருக்க ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்