வங்கியில் 13 கிலோ தங்க நகை மாயமான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மனு

வங்கியில் 13 கிலோ தங்க நகை மாயமான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2022-08-26 20:50 GMT


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் மேலாளர் கிங்ஸ்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் வங்கிக்கிளையில் வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த 13 கிலோ தங்க நகைகள் கடந்த 2019-ம் ஆண்டில் மாயமாகின. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 80 லட்சம். இதுகுறித்து வங்கியின் அலுவலக உதவியாளர் மாரிமுத்து மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள், தங்களின் நகைகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அடமான நகைகளுக்கு இன்சூரன்சு செய்யப்பட்டு உள்ளன. இன்சூரன்சு தொகையை வழங்கும்படி இன்சூரன்சு நிறுவனத்திடம் கேட்டோம். அதற்கு அவர்கள், அடமானமாக பெற்ற நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசாரிடம் சான்றிதழ் பெற்றுத்தருமாறு கூறுகிறார்கள். இதனால் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி கேட்டோம். ஆனாலும் எந்த நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை. இதற்கிடையே ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகை தொடர்புடைய வங்கி மோசடி வழக்குகளை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் தெரிவிக்கிறது. அந்த வகையில் எங்கள் வங்கி அடமான நகைகள் மாயமான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்