பெட்ரோல் குண்டுவீசிய ஆட்டோ டிரைவர் கைது

பா.ஜ.க. நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-29 18:45 GMT


பா.ஜ.க. நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெட்ரோல் குண்டுவீச்சு

கோவையில் கடந்த வாரம் பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகர போலீசில் மட்டும் இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் கைது

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி மோகனின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், பா.ஜ.க. நிர்வாகி மோகனின் கடை மீது கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பெரியார் சமத்துவ புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ரபிக் (வயது 31) என்பவர் பெட்ரோல்குண்டு வீசியதும், அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெட்ரோல் குண்டுவீச்சு, அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்