காரைக்குடி அருகே டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த ஊழியர் சாவு சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சில் காயம் அடைந்த அந்த கடையின் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சில் காயம் அடைந்த அந்த கடையின் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இரவு 9.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிவிட்டார். இதில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் தீயில் எரிந்து சேதமானது.
மேலும் இந்த சம்பவத்தில் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த இளையான்குடி இண்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 43) பலத்த தீக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அர்ஜூனன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்பாண்டி(23) என்பவரை கைது செய்தனர். அவரும் குண்டு வீச்சின்போது காயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் பள்ளத்தூர் பகுதியில் தினமும் மது குடித்துவிட்டு பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த சம்பவங்கள் என் மனதை பாதித்தது. இதனால் மது விற்கும் கடைகளின் மீது தனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அதன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ராஜேஷ் பாண்டி தெரிவித்தார்.
ஊழியர் சாவு
இந்நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜூனன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அர்ஜூனன் இறந்ததை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 131 டாஸ்மாக் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 3 மணிக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் உயிரிழந்த அர்ஜூனன் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அங்கு பணியாற்றி வந்த பணியாளர் அர்ஜூனன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனால், அவருடைய உறவினர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்தனர்.
மேலும், அவர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கொலை செய்யப்பட்ட அர்ஜூனனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர், உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.