பெட்ரோல் பங்குகளில் எரிபொருள்நிரப்பும்போது அளவு குறைகிறதா?

இதுகுறித்து பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-05-26 18:45 GMT

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில்தான் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?

பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா? இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

சரி பார்க்க வேண்டும்

நாமக்கல் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் ஜி.சரவணன் கூறியதாவது:-

முன்பெல்லாம் ஆங்காங்கே பெட்ரோல் பங்குகளில் எரிபொருளின் அளவு குறைவதாக சில புகார்கள் வரும். ஆனால் தற்போது பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைவதாக பெரும்பாலும் புகார் எழுவது கிடையாது. ஏனெனில் அனைத்தும் தானியங்கி எந்திர முறையில் நடைபெறுகிறது. தவறு நடந்தால் தானியங்கி எந்திரம் பம்பை இயங்கவிடாமல் நிறுத்திவிடும். பின்னர் அந்த பம்பின் மூலம் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப முடியாது.

ஊழியர்களால் சில தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதையும் கணினியில் பதிவாகும் விவரங்களைக் கொண்டு சரி பார்த்து விட முடியும். யாராவது ஒரு வாடிக்கையாளர் புகார் தெரிவித்தால், உடனடியாக அவரின் வாகனத்தில் நிரப்பப்பட்ட எரிபொருளின் அளவை கணினியில் சரி பார்த்துவிடலாம். எனவே பெரும்பாலும் அத்தகைய புகார்கள் தற்போது எழுவது இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று கவனக்குறைவு அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்தவுடன் எரிபொருளை நிரப்புவதற்கு முன்பு மீட்டரில் ஜீரோவை நிச்சயம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிறகும் அதற்கான தொகை மற்றும் அளவீட்டை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இவ்வாறு செய்தாலே வாடிக்கையாளர்களின் பெரும்பாலான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

அவ்வப்போது ஆய்வு

செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார்:-

ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அடித்தால் மைலேஜ் குறைவாக கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் எரிபொருளின் அளவு சரியாக உள்ளதா? என்பதை சரி பார்க்கக்கூடிய சூழ்நிலையில் மக்கள் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் அளவில் சில இடங்களில் அளவு வித்தியாசப்படுகிறது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அளவுகள் இருக்கிறதா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக எரிபொருளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சேவை குறைபாட்டில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் புகார்

திருச்செங்கோட்டை சேர்ந்த இளங்கோவன்:-

நமது மாவட்டத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய அளவு எரிபொருள் வழங்கப்படுகிறது. ஒரு சில பங்குகள் மீது பொதுமக்கள் புகார் அளிப்பது தொடர்ந்து தான் வருகிறது. அத்தகைய புகார்கள் தொடர்பாக எவ்வித பெரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிவதில்லை.

ஆனால் சரியான அளவில் எரிபொருளை வழங்கும் பங்குகளில் மக்கள் குவிந்தது குறைந்தபாடில்லை. எனவே உண்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான வித்தியாசத்தை அதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஊழலில் ஈடுபடும் அத்தகைய பெட்ரோல் பங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் எரிபொருள் அளவை குறைத்து வழங்கும் பெட்ரோல் பங்குகளே இல்லை என்ற நிலை உருவாகும்.

சரியான அளவில்

பரமத்திவேலூரை சேர்ந்த வீரமணி:-

ஒரு சில பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் சரியான அளவில் வாகனங்களுக்கு நிரப்பப்படுவது இல்லை. அது குறித்து பங்கு ஊழியர்களிடம் கேட்டால் முறையான பதிலும் கிடையாது. அதன் காரணமாக குறைந்த அளவு மைலேஜ் தான் கிடைக்கிறது. அதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தற்போதைய காலத்தில் 2 சக்கர வாகனங்கள் இல்லாத வீடே கிடையாது. எனவே நாள்தோறும் லட்சக்கணக்கானோர் எரிபொருளை தங்கள் வாகனங்களுக்கு நிரப்புகின்றனர். பைசா அளவில் எரிபொருள் அளவு குறைந்தாலும், அது மிகப்பெரிய ஊழலாகும். எனவே அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதை அரசும் தனியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பெட்ரோல் பங்குகளில் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எந்திரம் தவறு செய்யாது

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி:-

அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம்.

சரி செய்ய முடியும்

அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும்.

அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

எண்ணெய் நிறுவனம் மறுப்பு

இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம்.

இதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இதற்காக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

உறுதி செய்து கொள்ள வேண்டும்

பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்யபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்