மாற்றுத்திறனாளி வாலிபர் கலெக்டரிடம் மனு
மாற்றுத்திறனாளி வாலிபர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம்,
சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியினர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் தங்களது மகனான மாற்றுத்திறனாளி ஸ்ரீராம் சீனிவாசுடன் (வயது29) வந்து மனு அளித்தனர். இதன்பின்னர் பெற்றோர் கூறியதாவது:-
எங்களது மகன் சிறுவயது முதலே மனவளர்ச்சி குன்றியவர். கால்கள் இரண்டும் செயல்பட முடியாதவர். கைகள் மேலே தூக்க முடியாத நிலையில் உள்ளவர். 4 வயது முதல் நீச்சல் பயிற்சி பெற்ற அவர் நீச்சலில் சாதனை படைக்க எண்ணி தனது நீச்சல் திறனை வளர்த்து கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் புதுச்சேரி இடையே 5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து ஜனாதிபதி விருது பெற்றார். இதன்பின்னர் அடுத்த ஆண்டே அதே பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஆளுநர் விருது பெற்றார். தற்போது இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி இடையே 32 கிலோ மீட்டர் தூரத்தினை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை படைக்க உள்ளார்.
இதற்காக அவர் உள்பட நாங்கள் குழுவாக இலங்கை சென்று நாளை (12-ந் தேதி) மாலை தலைமன்னாரில் இருந்து கிளம்பி வருகிறோம். 13-ந்தேதி தனுஷ்கோடி வந்தடைய உள்ளார். ஸ்ரீராம் சீனிவாஸ் கடலில் இடைவிடாது நீந்தி வர உள்ளார். மற்றவர்களை போல இவர் கால்களை வீசி கைகளை தூக்கி வர முடியாது என்பதால் உடல் மற்றும் கைளை அசைத்து மட்டும் நீந்தி வர உள்ளார். தனுஷ்கோடி வரும் அவரை வரவேற்க கலெக்டரை அழைக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.