தவுட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை பகுதியில் மாற்று வழி அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
தவுட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை பகுதியில் மாற்று வழி அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 332 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 62 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் 40 பேருக்கு ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் 470 மதிப்பில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
பொதுவழி பாதை
கூட்டத்தில் கரூர் மாவட்டம், கட்டிப்பாளையம், தவுட்டுப்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எமது ஊரில் என்.எச்.7 நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை காலமாக அதை கடந்து வந்தோம். இதில் பள்ளி மாணவர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள் கட்டிப்பாளையம், தவுட்டுப்பாளையம், நத்தமேட்டுபாளையம், திருகாடுதுறை மற்றும் அதை சுற்றி வரும் கிராம மக்கள் அனைவரும் கடந்து தான் சென்று ஆக வேண்டும். இப்போது அந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது. ஆகையால் நாங்கள் மிக சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
பள்ளி, ரேஷன் கடை, மருத்துவமனை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், டி.என்.பி.எல்., கரூர், வேலூர், நாமக்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் பல ஊர்களுக்கு செல்லும் பெண்கள், 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஆகையால் எங்களுக்கு மாற்று வழி, பொதுவழி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கள் விற்பனை கொண்டு வர...
கரூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வரும் வரை தமிழக அரசு உடனடியாக பனை விவசாயிகளிடம் கள் இறக்க அனுமதி வழங்கி அதனை கொள்முதல் செய்து டாஸ்மாக் கடைகளில் கள் விற்பனை கொண்டு வர வேண்டும். பனை தொழில் விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசால் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத பார்களுக்கு தடைவிதிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதை வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், ஆதிதிராவிட அரிசன காலனி, கல்லடை கிராமம், ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் இடுகாடு பாதை வசதி இல்லை.
எனவே எங்கள் ஊரில் இடுகாடு பாதை வசதி அமைக்க கூடிய விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.