மாஞ்சோலை மலைப்பகுதி சாலைகளை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

மாஞ்சோலை மலைப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.

Update: 2023-06-05 19:58 GMT

நெல்லை:

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று வெயில் 102 டிகிரியை தாண்டி அடித்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

குண்டும் குழியுமான சாலை

மாஞ்சோலை பகுதியில் பிறந்து வளர்ந்து படித்து தற்போது நெல்லையில் வசித்து வருகின்ற வக்கீல் அரசு அமல்ராஜ், ஓய்வுபெற்ற ெரயில்வே அதிகாரி செல்லத்துரை, மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணியம்மாள், கவுன்சிலர்கள் ஸ்டாலின், ஜான் கென்னடி, ஜெயா, பாமா ஆகியோர் தலைமையில் மாஞ்சோலை பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''நாங்கள் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். இந்த எஸ்டேட்டுகளுக்கு வாகனங்கள் செல்லும் மலைச்சாலையானது சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக வாகனத்தில் தொழிலாளர்களும், பொதுமக்களும் பயணம் செய்ய முடியாத நிலையில் மோசமாக உள்ளது. மருத்துவ வசதிக்கு மலையில் இருந்து கீழே வருவதற்கோ மற்றும் மலைக்கு உடனடியாக செல்வதற்கோ முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாஞ்சோலை மலைப்பகுதி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். எஸ்டேட்டில் உள்ள உறவினர்களை பார்க்க செல்கிறவர்களுக்கு மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்படுகிறது. சுற்றுலா கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். அரசு பஸ்சில் சென்றவர்களை கீழே இறக்கி விட்டு உள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான ரேஷன் கடை, சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

அடிப்படை வசதிகள்

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணியம்மாள் கொடுத்துள்ள மனுவில், ''தேனி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை பிடித்துள்ளனர். அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியான மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ள வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை முயற்சி செய்கிறது. இங்கு அந்த யானையை விடக்கூடாது. அந்த யானையை இங்கு விட்டால் இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால் அளித்த மனுவில், "சேரன்மாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இங்கே கடந்த 30 ஆண்டுகளாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், ''மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாயில் மலக்கழிவுகள் நேரடியாக கலக்கிறது. மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நீர்நிலையை நச்சுக்கேடாக மாற்றி வருகின்றனர். எனவே இந்த நிலையை போக்கி பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ச்சுணன் கொடுத்த மனுவில், ''நான் கடந்து 2003-ம் ஆண்டில் இருந்து பொது இடங்களில் தமிழகம் முழுவதும் 4 லட்சம் மரங்கள் வளர்த்துள்ளேன். 10 ஆயிரம் மரங்கள் வளர்க்கும் ஆர்வலர்களுக்கு மரங்கள் வளர்க்கும் முறையினை பயிற்சி வழங்கி உள்ளேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் வளர்க்க தயாராக உள்ளேன். இந்த மரங்களை வாங்கி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்