மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Update: 2023-09-04 19:00 GMT


மழைக்காலம் தொடங்குவதால் கண்மாயை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கண்மாய், ஊருணிகளை தூர்வாருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

கோரிக்கை மனு

சாத்தரசன்கோட்டையை அடுத்த நாடாமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி உடையாள், கலெக்டர் ஆஷா அஜீத்திடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

மாடகோட்டை கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயிகள். எங்களுடைய விவசாய நிலங்கள் அனைத்தும் கண்மாய் தண்ணீரை நம்பி உள்ளது. மாடகோட்டை கிராமத்தில் பெரிய கண்மாய் மற்றும் சின்ன கண்மாய் ஆகியவை உள்ளன. இவைகள் மூலமாகத்தான் பாசன வசதியை பெற்று வருகின்றோம். பெரிய கண்மாய் மடை வழியாகத்தான் சின்ன கண்மாய்க்கு தண்ணீர் வரும். தற்போது பெரிய கண்மாயில் உள்ள 2 மடைகள் மற்றும் சின்ன கண்மாயில் உள்ள 2 மடைகளும் கடந்த பல வருடங்களாக பழுதடைந்து கிடக்கின்றது. இது தவிர கண்மாய் கரைகளும் வலுவிழந்து உள்பகுதி மேட்டுப்பகுதியாக உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேர்க்கவும் முடியவில்லை இவை பொதுப்பணி துறையின் சருகணி ஆறு வடிவ கோட்டத்தில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

இவைகளை சரி செய்து தரும்படி கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். எங்கள் மனுவுக்கு பதில் அளிக்கும் போது நபார்டு திட்டத்தின் கீழ் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பதில் கொடுக்கின்றார்கள். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. இதற்குள் எங்கள் கண்மாயை சீரமைத்தால் மட்டுமே எங்களால் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே எங்கள் கண்மாயை சீரமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மற்றொரு மனு

இதேபோல் திருப்புவனத்தை அடுத்த மெட்டுசாவடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

லாடனேந்தல் பொதுப்பணி துறை கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்