ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு

அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-15 07:51 GMT

சென்னை,

ஓ.பன்னீர் செல்வம் தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி இருக்கிறார். போலீஸ் உதவியுடன் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் அரசு மற்றும் கட்சியில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. எனவே அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர் செல்வத்தின் மீதும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி.யிடம் கடந்த மாதம் 15-ந் தேதி மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆதிராஜாராம் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்