ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் தட்டுப்பாட்டை போக்க கோரி கலெக்டரிடம் மனு

கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்தி, ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கட்டிட தொழிலாளர்கள் மனு வழங்கினர்.

Update: 2022-06-13 21:29 GMT

ெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், பொருளாளர் சாந்தி ஜாபர் மற்றும் நிர்வாகிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கைவிலங்கு மாட்டியபடி வந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சேர்ந்த மைதீன் பாத்து என்பவர் தனது மகன் சித்திக் அலியை விடுவிக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

பேட்டை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த வாலிபர் சேதுபதி படுகொலைக்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் காசிவிசுவநாதன், கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், தலைவர் சடையப்பன் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''கட்டுமான பொருட்களுக்கு சமீபகாலமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, எரிபொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. மணல் தட்டுப்பாட்டால் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் வினியோகம் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெரிதும் முடங்கி கிடக்கிறது. எனவே கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதோடு, ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் தட்டுப்பாட்டை போக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரிகளை கனிமவளத்துறையின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தி நியாயமான விலையில் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்