நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
ஆவுடையார்கோவில் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறி ஏமாற்றியதாகவும், தீபாவளி சீட்டு நடத்தியும் மோசடி செய்ததாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணம் கொடுத்து ஏமாந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றி பொதுமக்களிடம் பணம் வாங்கி கொடுத்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விவசாயிகள் மனு
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதியில் விளைநிலங்கள், வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தனர். மேலும் பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.