ஊதிய உயர்வு வழங்கக்கோரி கலெக்டரிடம், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மனு

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தேனி கலெக்டரிடம் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக சுகாதார துறையில் தேசிய சுகாதார குழும திட்டத்தில் இயன்முறை மருத்துவர்களாக (பிசியோதெரபிஸ்ட்) நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இயன்முறை மருத்துவர்கள் பணியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பி.பி.டி. பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே எங்களின் கல்வித்தகுதி மற்றும் வாழ்வாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஆயுஷ் டாக்டர்களுக்கு இணையான ஊதிய அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் மாத ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவர்களுக்கான பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு தலைமை ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள இயன்முறை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், சொந்த வீடு இல்லாத தங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்