தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதார சான்று வழங்கக்கோரி டாகடர்கள் மனு
தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதார சான்று வழங்கக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் டாக்டர்கள் மனு கொடுத்தனர்.
தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் டாக்டர் அன்புராஜன் தலைமையில் இந்திய மருத்துவ சங்க நெல்லை சுப்பிரமணியன், செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் பிரபுராஜ், கூட்டமைப்பு உதவி செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் மேலாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "நெல்லை மாநகர பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள் அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்பத்திரிகள் முறையாக அனைத்து சான்றிதழ்களும் பெற்று இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுகாதார சான்றிதழ் புதுப்பிக்கக்கோரி மாநகராட்சியில் விண்ணப்பித்து இருக்கிறோம்.
ஆனால் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியதன் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கொரோனா காலத்தில் அரசு கேட்டு கொண்டதற்கு ஏற்ப மக்களுக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் பல்வேறு தியாகங்களை செய்தது. எனவே ஆஸ்பத்திரிகள் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.