சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரி குறைதீர் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மனு

சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பெண் பணியாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-11-28 20:07 GMT

சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பெண் பணியாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அளித்த மனுவில், காட்டுப்புத்தூர் கிழக்கு பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு 140 மனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீட்டுமனையை உரிமையாளர்களுக்கு அளந்து அத்துகாட்டாமல் உள்ளதால் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்கள் இதுவரை வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

மேலும், சில சமூகவிரோதிகள் இந்த இடத்தை மற்றவர்கள் பெயரில் மாற்றம் செய்து மோசடி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இலவச வீட்டுமனையை அளந்து அத்துக்கல் நட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

சிறப்பு காலமுறை ஊதியம்

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் அளித்த மனுவில், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு, கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தூய்மை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டதை, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மருத்துவ சிகிச்சை வழங்க...

மண்ணச்சநல்லூர் தாலுகா தில்லாம்பட்டியை சேர்ந்த லோகநாதன் அளித்த மனுவில், எனது பேத்தி கிரிஜா (வயது 11) தில்லாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பிறந்தது முதல் தோல் சம்பந்தமான வினோத நோய் இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளேன். இதில் ஒரு சில டாக்டர்கள் இந்த நோய் சரியாகிவிடும். ஆனால் இங்கு வசதி இல்லை என்றும், ஒரு சிலர் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினர். இதுபற்றி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தேன். அப்போது சென்னையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால் பொருளாதார சிக்கல் காரணமாக என்னால் சிகிச்சைக்கு அங்கு செல்ல முடியவில்லை. எனவே எனது பேத்திக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவித்தொகையும், மாதாந்திர உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்பட 533 மனுக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்