போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
சாமி சிலை சேதம்-கோவிலில் மணிகள் திருட்டு தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
விருதுநகர் அருகே நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஜக்கம்மாள் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு பிரிவினர் மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் கிராமத்தில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் கோவிலில் இருந்த வெண்கல மணிகள் திருடு போய்விட்டதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே சாமி சேதப்படுத்தப்பட்ட சம்பவம், மணிகள் திருட்டு தொடர்பாக பாரபட்சமில்லாமல் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி நாகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளிடம் மனு கொடுத்துள்ளனர்.