குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-17 19:15 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 360 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 29 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ரூ.1,000 வழங்க கோரிக்கை

கரூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தமிழக அரசு நிறுத்தப்பட்ட பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கிட வேண்டும். 100 நாள் வேலைதிட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்துவதோடு தொடர்ந்து வேலையும், கூலியும் முறைப்படுத்திட வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட வேண்டும்.

முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட தலைவர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர் உஷாராணி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்