மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-25 18:41 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 362 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 62 மனுக்கள் பெறப்பட்டன. 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் 18 பேருக்கு ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அணையை தூர்வார வேண்டும்

கூட்டத்தில், கடவூர் தாலுகா பாப்பனம்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடவூர் ஊராட்சியில் உள்ள பூஞ்சோலை வனப்பகுதியில் கட்டப்பட்ட 51 அடி அளவு கொண்ட பொண்ணணியாறு அணையானது கரூர் மாவட்டத்தில் அனைத்து நீர்த்தேக்க பகுதியாக உள்ளது. அணையின் பாசனப்பகுதி திருச்சி மாவட்டத்தில் உள்ள குடமுருட்டி ஆறாக மாறி காவிரியில் கலக்கிறது. கிட்டத்தட்ட 2500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கு இந்த அணையின் நீர் பயன்படுகிறது.

கூடவே பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும் இந்த அணையின் நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. இவ்வாறு உள்ள பொண்ணியாறு பல ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளது. மேலும் சிலர் இரவு நேரங்களில் டிராக்டர் மூலமாக மண் திருடியும் செல்கின்றனர். இந்த அணையை தூர்வாரப்பட்டால் மழைகாலத்தில் நீர் அதிகம் சேமித்து வைக்க முடியும். இதனால் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 2500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என அதில் கூறியிருந்தார்.

மின்கட்டண உயர்வு

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது மின் கட்டண உயர்வு. எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பஸ் வசதி

கரூர் முத்துரெங்கம்பட்டியை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், மேற்கண்ட கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கிராமமக்கள் வேலைக்கு செல்லவும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே முத்துரெங்கம்பட்டி பகுதியில் இருந்து சேங்கல், உப்பிடமங்கலம், புலியூர் வழியாக கரூர் செல்வதற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்