சுண்ணாம்புக்கல் குவாரியை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுண்ணாம்புக்கல் குவாரியை மூடக்கோரி மனு அளிக்கப்பட்டன.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 305 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 41 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 84 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்து 70 ஆயிரத்து 253 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சேர்வைகார்னப்பட்டி, தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி யாழினி 40 திருக்குறள்களை மனப்பாடமாக கூறினார். இந்த மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
சுண்ணாம்புக்கல் குவாரி
கூட்டத்தில், கடவூர் வட்டம், மேலப்பகுதி ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-கடவூர் வட்டம், மேலப்பகுதி கிராமம் வீரக்கவுண்டன்பட்டி அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்தை பயன்படுத்தி சுண்ணாம்பு கற்களை இரவுபகலாக வெட்டி எடுத்து வருகின்றனர். இதனால் அதிக சக்தி வாய்ந்த அதிர்வுகள் ஏற்படும்போது சுண்ணாம்பு கற்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள், வீடுகளின் மீதும் கற்கள் விழுந்து உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே எங்களது பகுதியை முழுமையாக ஆய்வு செய்து பொதுமக்களின் நலன்கருதி செயல்பட்டு வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு ஊர்பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை
கரூர், தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சிலம்பாயி. இவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இந்நிலையில் பழனிச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கயிறை எடுத்து மனைவியின் கழுத்தில் மாட்ட முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை விசாரித்து கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-எனது மனைவி உடல்நலக்குறைவின்றி இருப்பதால் சுமார் 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்தேன். இப்போது எனக்கு வயதாகி விட்டதால் என் மனைவியை காப்பாற்ற மிகவும் அவதிப்படுகிறேன். வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கூட எங்களால் கொடுக்க முடியவில்லை. எங்களை எனது மகள் கோர்ட்டு, வழக்கு என்று அலைய வைத்து மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டார். எங்கள் காட்டை விற்றாவது ஜீவனம் செய்து கொள்ளலாம் என நினைத்தோம். எனது மகன் பத்திரம் இல்லை என்று சொல்கிறார். ஆகையால் நாங்கள் வாழ்வதற்கு எந்தவித வழியும் இல்லை. எனவே மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.