இருளரின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இருளரின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

Update: 2022-06-20 20:45 GMT

தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 311 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் அரியலூர் மாவட்டம் யுத்தப்பள்ளம் பெரிய ஏரிக்கரை தெருவில் வசிக்கும் இருளர் இன மக்கள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களுக்கு குடியிருக்க நிரந்தர இடம் எதுவும் இல்லை. இதனால் எங்களது தாய், தந்தை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே அப்பகுதி மக்களுக்கு தற்போது அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதைபோல் எங்களுக்கும் வழங்க வேண்டும். எங்களுக்கு பொருளாதார வசதி எதுவும் இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அரசு வேலை வழங்க...

ஆமணக்கத்தோண்டி கிராமத்தை சேர்ந்த சங்கீதா கொடுத்த மனுவில், எனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் சுமையால் உயிரிழந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது குழந்தைகளை காப்பாற்றவும், கடனை அடைக்கவும் சிரமப்படும் நிலையில், எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் எனக்கு இதுவரை விதவை உதவித்தொகையும் கிடைக்கவில்லை, என்று கூறியிருந்தார்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்