தீ விபத்தில் இறந்த மகனின் உடலை சேலம் கொண்டு வர நடவடிக்கை

சவுதி அரேபியாவில் தீ விபத்தில் இறந்த மகனின் உடலை சேலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-05-06 20:28 GMT

சவுதி அரேபியாவில் தீ விபத்தில் இறந்த மகனின் உடலை சேலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தனர்.

தீ விபத்தில் இறந்தார்

சேலம் பழைய சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் சீதாராமன் (வயது 35). இவருக்கு வாசுகி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சீதாராமன் கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ரியாத் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அவர் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சீதாராமன் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜகோபாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை ராஜகோபால், மருமகள் வாசுகி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

கொண்டு வர நடவடிக்கை

பின்னர் இதுகுறித்து ராஜகோபால் நிருபர்களிடம் கூறும் போது, 'சவுதி அரேபியாவுக்கு கடந்த வாரம் வேலைக்கு சென்ற எனது மகன் சீதாராமன் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எனது மகன் சிக்கி இறந்துள்ளதாக எனது தகவல் கிடைத்துள்ளது. எனவே எனது மகனின் உடலை சேலம் கொண்டு வருவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்