காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: லாரி கிளீனரின் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்-போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் தஞ்சம்

Update: 2023-04-17 18:45 GMT

நாமக்கல்:

காதல் திருமணம் செய்த லாரி கிளீனரின் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பலிடம் இருந்து, பாதுகாப்பு கேட்டு தம்பதியினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

காதல் திருமணம்

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள பள்ளிபட்டியை சேர்ந்தவர்கள் ராஜா-லட்சுமி தம்பதியர். இவர்களின் மூத்த மகன் பிரசாந்த் (வயது 25). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த 7-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்து உள்ளனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பினர்.

வீட்டை நொறுக்கிய கும்பல்

இருப்பினும் காதல் ஜோடியினர் இருவரும் அச்சமடைந்து, வீட்டிற்கு செல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி உள்ளனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி பெண் வீட்டாரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் ராஜா-லட்சுமி தம்பதியினரிடம் காதல் ஜோடி எங்கே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே மீண்டும் பிரசாந்தின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், ராஜா மற்றும் லட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, வீட்டையும், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

பெற்றோர் தஞ்சம்

இதனால் அச்சமடைந்த பிரசாந்தின் பெற்றோர் நேற்று பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனிடம் மனு கொடுத்தனர்.

காதல் திருமணம் செய்த லாரி கிளீனரின் வீட்டை, பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்