ஏலகிரி அருகே மழைநீர் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
தர்மபுரி:
ஏலகிரி அருகே மழைநீர் செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஓடையில் ஆக்கிரமிப்பு
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ஏலகிரி அருகே உள்ள கொத்தமல்லிகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில், எங்கள் ஊரில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த பகுதியில் மழைநீர் செல்லும் ஓடையாகவும், மற்ற காலங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு போக்குவரத்து பாதையாகவும் இருந்தது.
இந்த ஓடையின் சில பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீர் செல்லும் பாதையில் தடை ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த ஓடையை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நலத்திட்ட உதவிகள்
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய தீர்வு காண உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, ஒரு பயனாளிக்கு இலவச தையல் எந்திரம், அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான பங்களிப்பு தொகை என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.