காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் தண்ணீர்: தொப்பையாறு கால்வாய்களை தூர்வார வேண்டும்-பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

Update: 2023-02-21 18:45 GMT

தர்மபுரி:

காவிரி ஆற்றில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க தொப்பையாறு கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழுவின்படி உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். டேங்க் ஆபரேட்டர்களுக்கு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணைப்படி அகவிலைப்படி உயர்வை உயர்த்தி முறையாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கால்வாயை தூர்வார வேண்டும்

பாலக்கோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள வீடுகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை தங்கள் நிலத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த சிலர் இடித்துள்ளனர். இதனால் இந்த பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தொப்பையாறு பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில், தொப்பையாறு இடது புற மற்றும் வலது புற கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் திறந்து விடப்படும் என்று விவசாயிகளிடம் கருத்து கேட்கும் போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ளாமல் கடந்த 10-ந் தேதி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாசன விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

வீணாக செல்லும் நிலை

தண்ணீர் விவசாயிகளுக்கு பயன்படாமல் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய ஆய்வு நடத்தி கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்