சிந்தல்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

Update: 2023-02-06 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மொத்தம் 406 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் சிந்தல்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், சிந்தல்பாடி ஊராட்சி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் 30 படுக்கை வசதி மற்றும் சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றுடன் 24 மணி நேரமும் டாக்டர்களுடன் செயல்படக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். இங்குள்ள மதுகடையை பொதுமக்கள் நலன் கருதி அகற்ற வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தார்சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜங்கமையனூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மேலும் செய்திகள்