பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி கற்றுத்தர வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு

நீச்சல் பயிற்சி கற்று கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-01-09 18:45 GMT

சிவகங்கை,

நீர்நிலைகளில் மூழ்கி மாணவ-மாணவிகள் உயிரிழப்பதை தவிர்க்க வட்டார, பேரூராட்சி பகுதியில் நீச்சல் குளம் அமைத்து நீச்சல் பயிற்சி கற்று கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் காமாட்சி, அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 295 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நீச்சல் பயிற்சி காேரி மனு

கூட்டத்தில் மதுரை மாவட்டம் வலைசேரி பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஏராளமான திறந்தவெளி நீர்நிலைகள் மற்றும் கிணறுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். நன்கு உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட நீச்சல் பயிற்சி இல்லாமல் உயிரிழப்பது மன வேதனை தருகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தலைமை இடத்தில் தலா ஒன்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய இடங்களில் தலா ஒன்றுமாக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் நீச்சல் குளம் அமைத்து கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சியை கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்