தர்மபுரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

Update: 2022-09-20 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

புகார் மனு

காரிமங்கலம் தாலுகா கே.ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்த 37 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காரிமங்கலம் தாலுகா கே.ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தோம். சீட்டு முதிர்ச்சி அடைந்தும் எங்களுக்கு பணம் தரவில்லை.

இவ்வாறு எங்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் தராமல் நிலுவை வைத்தார். ஒரு சிலரிடம் வட்டி தருவதாக கூறி டெபாசிட் தொகையும் பெற்றார். பணம் திருப்பி கேட்டால் காலம் கடத்தி வந்தார். பின்பு அவர் ஊரை விட்டு வெளியே போய்விட்டார். அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.4 கோடி வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடமிருந்து நாங்கள் கட்டிய ஏலச் சீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

மேலும் செய்திகள்