நகராட்சி நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்ட இடத்திலேயே பொது கழிப்பிடம் கட்ட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

நகராட்சி நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்ட இடத்திலேயே பொது கழிப்பிடம் கட்ட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

Update: 2022-06-15 17:33 GMT

நாமக்கல் நகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட குப்பம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குப்பம்பாளையம் அருந்ததியர் காலனியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள் ஆவோம். எங்களுக்கு பொது கழிப்பிட வசதி எதுவும் இல்லாததால், நாங்கள் தினசரி அருகில் உள்ள மந்தைகாட்டில் இயற்கை உபாதை கழித்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். குறிப்பாக பெண்கள் மிகவும் பாதுகாப்பு இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

நாங்கள் பலமுறை அரசிடம் எங்களுக்கு பொதுக்கழிப்பிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது எங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பொதுக்கழிப்பிடம் கட்ட அனுமதி அளித்து இருந்தது. அதன்படி எங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து பொதுக்கழிப்பிடம் கட்ட முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்தது.

ஆனால் அதன் அருகில் உள்ள நிலத்துக்காரர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கேட்டதற்கு அகற்ற முடியாது என கூறி பொய்யான தகவல்களை பரப்பி இடையூறு செய்து வருகிறார்.

நகராட்சி நிர்வாகத்தினரால் ஆய்வு செய்யப்பட்ட இடத்திலேயே பொது கழிப்பிடத்தை கட்ட ஊர் பொதுமக்களாகிய எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆதலால் பொது கழிப்பிடத்தை கட்டி எங்கள் ஊர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்