மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்டிக்கடை உரிமையாளர் பலி
டிராக்டர் டிரைலரில் சட்டை சிக்கியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பெட்டிக்கடை உரிமையாளர் பலியானார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள சம்பன்குளம் ஹமீதியா தெருவைச்சேர்ந்த அசன் மைதீன் என்பவரது மகன் முகம்மது நயினார் (வயது 54). இவர் சம்பன்குளம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று மதியம் இவர் சாப்பிடுவதற்காக குமார் என்பவரது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சம்பன்குளம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் டிரைலரின் கொக்கியில் இவரது சட்டை சிக்கி இழுத்ததில் கீழே விழுந்தார். இதில் முகம்மது நயினார் படுகாயம் அடைந்தார். அவரை அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் மேலும் விசாரித்து வருகிறார்.