வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
ராசிபுரம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய கட்டிட தொழிலாளியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கட்டிட தொழிலாளி. ரமேஷ் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக பைரவன், பைரவி என்ற ஆண், பெண் நாய்களை செல்லமாக வளர்த்து வருகிறார்கள். இதில் பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது. இதை அறிந்த ரமேஷ் குடும்பத்தினர் தங்களது மகளை போல வளர்த்த பைரவிக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து பைரவி நாய்க்கு நேற்று வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில், அழைப்பின் பேரில் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் பைரவி நாய்க்கு பெண்கள் வளையல், பூ அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு வளைகாப்பு நடத்தினர். தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியில் பரிமாறப்படுவது போல தக்காளி, எலுமிச்சை, புளி உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து விருந்து பரிமாறப்பட்டது. அதன்பின்னர் வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் நாய்க்கு மொய் வைத்தனர். தங்கள் வீட்டு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல் பெண் நாய்க்கு வளைகாப்பு நடத்திய ரமேஷ் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.