பெருஞ்சாணி அணை நீர்மட்டம்5 நாட்களில் 11½ அடி உயர்வு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 5 நாட்களில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 11½ அடி உயர்ந்துள்ளது.

Update: 2023-07-08 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 5 நாட்களில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 11½ அடி உயர்ந்துள்ளது.

தொடரும் மழை

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை கடுமையான உஷ்ணத்தில் இருந்து குளிர்ச்சியாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் பகலில் வெயிலாகவும், மாலையில் மழையுமாகவும் இருந்தது. நேற்று காலையில் லேசான தூறல் விழுந்தது. பின்னர் பகலில் மேகமூட்டமாகவும், வெயிலாகவும் மாறி, மாறி காணப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 6.2, பெருஞ்சாணி அணை- 4.8, சிற்றார்-1 அணை- 10.2, சிற்றார்-2 அணை- 11, புத்தன் அணை-5, மாம்பழத்துறையாறு அணை- 4, முக்கடல் அணை- 3.4, பூதப்பாண்டி- 1, களியல்- 5.5, நாகர்கோவில்- 6.2, சுருளக்கோடு- 3.4, தக்கலை- 2, பாலமோர்- 10.4, திற்பரப்பு- 4.5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

11½ அடி உயர்வு

அணைப்பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 826 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று அதைவிட கூடுதலாக வினாடிக்கு 972 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 646 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 294 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 3-ந் தேதி 17 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 28.60 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 11½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினத்தில் இருந்து ஒரே நாளில் 2½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திற்பரப்பு

கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் அந்த ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் பரவலாக கொட்டுகிறது.

திற்பரப்புக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்தனர். அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து மகிழ்ந்தனர்.

பின்னர் அருவியின் மேல் பகுதியில் உள்ள அணைக்கட்டுக்கு சுற்றுலா பயணிகள் சென்று உல்லாச படகு சவாரி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்