பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போன நிலையில் ஆகஸ்டு மாதம் பெய்ய வேண்டிய மழையில் 5 சதவீதம் மழைேய பெய்தது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 26 அடியாக சரிந்தது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போன நிலையில் ஆகஸ்டு மாதம் பெய்ய வேண்டிய மழையில் 5 சதவீதம் மழைேய பெய்தது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 26 அடியாக சரிந்தது.
பொய்த்து போன பருவமழை
குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி என்பதே இல்லாமல் இருந்து வந்தது. குறிப்பாக கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ நெல் சாகுபடி காலங்களில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பிய நிலையில் இருந்து வந்தன. ஆனால் நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால் பாசனத்திற்குக் கூட தண்ணீர் கொடுக்க முடியாத பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வரை சராசரியாக 339.4 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 103.9 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது 31 சதவீத மழைப்பொழிவு ஆகும். இதுபோல் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வரை மாவட்டத்தில் சராசரியாக 56.4 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 3.1 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது 5 சதவீதம் ஆகும்.
நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
மழை குறைவாக பெய்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது கடந்த மாதம் 27-ந் தேதி நிறுத்தப்பட்டது. மொத்த கொள்ளளவு 77 அடியாக உள்ள பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 26 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 203 மில்லியன் கன அடியாக உள்ளது (அணையின் நிகர நீர் கொள்ளளவு 2890 மில்லியன் கன அடி). தற்போதைய நீர் இருப்பு 9 சதவீதம் மட்டுமே ஆகும். இந்தத் தண்ணீரையும் பாசனத்திற்காக திறந்து விட்டால் அணையிலுள்ள மீன்கள் அனைத்து செத்து மிதக்கும் நிலை ஏற்படும்.
பேச்சிப்பாறை அணை
இதுபோல் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 20.11 அடியாக உள்ளது. அதாவது அணையின் நீர் இருப்பு 28.83 சதவீதமாக உள்ளது. (இந்த அணையின் நிகர நீர் கொள்ளளவு 4350 மில்லியன் கன அடி ஆகும்).
தற்போது மாவட்டத்தில் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் நிறைவடைய மேலும் 15 நாட்கள் ஆகலாம். அதே வேளையில் அணைகளில் இருக்கும் குறைவான தண்ணீரை வைத்து பாசனத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்குவது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பேச்சிப்பறை அணையின் நீர் இருப்பு 30 சதவீதத்திற்கு கீழே சரிந்துள்ளது. இந்தநிலையில் தோவாளை, அனந்தனாறு, பத்மநாபபுரம் புத்தனாறு, நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய்களில் முறை வைத்து தண்ணீர் விடுகிறோம். மழை பெய்தால் மட்டுமே தட்டுப்பாடின்றி தண்ணீர் கொடுக்க முடியும்' என்றார்.