பெருமாள் கோவில் தேரோட்டம்

Update: 2023-06-03 20:25 GMT

சேலம் கோட்டைபெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்த்திருவிழா

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வந்தது.

மேலும் வெள்ளி பல்லக்கிலும் பல்வேறு விதமான வாகனங்களிலும் வீதி உலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அதிகாலை 5.45 மணிக்கு சாமி கோவிலில் இருந்து தேர் மண்டபத்துக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

வடம் பிடித்து இழுத்தனர்

தொடர்ந்து கோட்டை பெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 9 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. உதவி கலெக்டர் மாறன், கோவில் செயல் அலுவலர் சுதா மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள்எழுப்பினர்.

ராஜகணபதி கோவில் அருகே தொடங்கிய தேரோட்டம் 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், வேணுகோபாலசாமி வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

தீர்த்தவாரி

தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வண்டிகால உற்சவம் நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சத்தாபரணமும், 6-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்