பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா-அமைச்சர் சேகர்பாபு, வைகோ பங்கேற்பு
திருவேங்கடம் அருகே, பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, வைகோ கலந்து ெகாண்டனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே, பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, வைகோ கலந்து ெகாண்டனர்.
கும்பாபிஷேக விழா
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட மேல மரதோணி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
காலை 10.12 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் முன்னிலையில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வெங்கடேஷ், தென்காசி மாவட்ட உதவி ஆணையர் கோமதி, சங்கரன்கோவில் இந்து சமயத்துறை ஆய்வாளர் முருகன், மரத்தோணி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் சாலைலட்சுமி, ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், குருவிகுளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்பாட்டில் சிறப்பாக இந்த குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 460 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.
சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் கோமதி அம்பாளையும், சங்கரநாராயணரையும் தரிசனம் செய்தேன். கோவிலினுடைய தெப்பக்குளத்தையும் ஆய்வு செய்தேன். தெப்பக்குளம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த கருத்துருவை, மாவட்ட கலெக்டரிடம் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை இரண்டு, மூன்று நாட்களுக்குள் முழு அனுமதியை தெப்பக்குளம் சீரமைப்பதற்கு பெற்று தருவதாக ஒப்புகொண்டிருக்கிறார்கள்.
சங்கரநாராயண சுவாமி கோவில்
கோவிலுக்கு முழுவதுமாக 5½ கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். 7½ கோடி ரூபாய் செலவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோவிலில் செப்பணிட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நடத்திட ஏற்பாடு செய்திருக்கிறோம்.
திருப்பணிகளோடு சேர்ந்து 1000-வது ஆண்டு விழாவும் கொண்டாட இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல்
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறும்போது, எங்கள் மூதாதையர் கட்டிய இந்த கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு செய்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் கிராம பகுதி மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் தந்தை பெரியார் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஈ.வி.ேக.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.